இந்தியாவில் ஆர்குட் நிறுவனர் அறிமுகப்படுத்தும் புதிய செயலி ’ஹலோ’

0
”இணைய பயன்பாட்டாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொள்ளும் வகையில் அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும் என்பதே என்னுடைய கனவு. இது மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.”

தகவல் தொடர்புத் துறையில் உலகையே மாற்றியமைக்கப்போகும் புரட்சிகரமான தமது கண்டுபிடிப்பை 2004-ம் ஆண்டு ஆர்க்குட் அறிமுகப்படுத்தியபோது கூகுளில் அதன் எதிரொலி வெளிப்பட்டது. ஆர்குட்டின் முக்கியத்துவத்தை கூகிள் சரியாகக் கணித்ததால் புயக்கோக்டன் தன்னுடைய பெயரையே தன் கண்டுபிடிப்புக்கு வைத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

ஆர்க்குட் 2016ம் ஆண்டு பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹலோவுக்கும் அதேபோல் பெயர் வைக்கப்பட்டது என நான் நினைக்கிறேன்.

டெல்லி, மும்பை, புனே, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் என ஹலோவை விளம்பரப்படுத்துவதற்கான மூன்று வார பயணத்தின் முடிவில் மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்கூசச் செய்யும் அளவுக்கு ஆடம்பரமாக அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வார் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அடக்கமாக, ஆரவாரம் ஏதுமின்றி கூட்டத்தை நோக்கி ’ஹலோ’ என கைகுலுக்கியவாறே இயல்பாக நுழைந்தார்.

ஒரு மாதத்தில் 320 நிமிடங்கள் செலவிடப்பட்டு ஹலோ செயலி ஒரு மில்லியன் பதிவிறக்கங்களுடனும் பிரேசிலில் அதன் ஆரம்ப வரவேற்பே அதிசயிக்கத்தக்கதாக இருந்ததது. அதேபோல் சமூக ஒருங்கிணைப்பிற்கான அவரது புதிய முயற்சிகளும் அதிக வரவேற்பைப் பெற்றுத்தரும்.

நம் ஒவ்வொருவரின் கேள்விக்கும் யுவர்ஸ்டோரி விடைகளிக்கிறது.

இந்தியாவைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

ஆர்க்குட் தளம் சிறப்பாக செயல்பட்டு வரும் இரண்டு முக்கிய சந்தைகளில் ஒன்று இந்தியா. எனவே ஆர்க்குட் தனது அடுத்த பெரும் முயற்சிக்கு மீண்டும் இந்தியாவையே தேர்ந்தெடுத்தது. இந்தியாவில் ஏற்கெனவே உள்ள சமூக ஒருங்கிணைப்புச் சூழலானது தன் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

”அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் மொபைல் சந்தை மிகப்பெரிய அளவில் உள்ளது. தனிநபர் வருவாயும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்றார் ஆர்க்குட்.

இந்நிறுவனத்தின் சோதனை முயற்சிக்கு சுமார் இரு நூறு பயனர்களே தேவைப்பட்டனர். ஆனால் நாடு முழுவதும் இருந்து 35,000 பதிவிறக்கம் செய்யப்பட்டது.

ஹலோ.காம் என்கிற பெயர் எப்படி வந்தது?

2006-ம் ஆண்டு கூகுள் பிகாசா நிறுவனத்தை வாங்கியபோது ’ஹலோ’ அதன் ஃபோட்டோஷேரிங் க்ளையண்டாக இருந்தது. இறுதியாக பிகாசோ என்கிற பெயரில் தொடராமல் கூகுள் ஃபோட்டோஸ் என மறுபெயரிடப்பட்டது. ஆர்க்குட் ஹலோ.காம் அறிமுகப்படுத்தியபோது ஆர்க்குட்டின் முதலீட்டாளர்களில் கூகுளும் ஒன்றாகும். 

”இந்த டொமெயினைப் பயன்படுத்திக்கொள்ளலாமா என கேட்டோம் அவர்கள் உற்சாகத்துடன் அதனைக் கொடுத்துவிட்டனர்,” என்று ஆர்க்குட் விவரித்தார்.

ஹலோ எவ்வாறு வேறுபட்டுள்ளது?

எண்ணில்லா தளங்களையும் செயலிகளையும் பார்க்கையில் சமூகத்தை ஒருங்கிணைக்கும் எல்லாச் சாத்தியங்களையும் ஆராய்ந்து விட்டதாகவே தோன்றலாம். ஆனால் ஹலோ முற்றிலும் புதிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பெரும்பாலும் தகவல்கள் பார்க்கப்பட்டு நண்பர்கள், தெரிந்தவர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் பகிர்ந்துகொள்ளப்படும். ஹலோவில் பயனர்கள் அனைவரிடம் இருந்தும் உங்களது ஆர்வத்தை அடிப்படையாகக்கொண்டு தகவல்கள் பெறப்படும். 

”ஹலோவில் புதிய மனிதர்களைச் சந்திக்கலாம். இந்தத் தளத்தின் கட்டமைப்பு தனித்துவம் வாய்ந்ததாகும். 120 விருப்பப்பகுதிகள் இருக்கும். இதை ’பெர்சோனாஸ்’ என அழைக்கிறோம். தளத்தினுள் நுழையும்போதே நீங்கள் முதலில் உங்களுக்கு ஆர்வம் அதிகமுள்ள ஐந்து பெர்சோனாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். நெருங்கிய வட்டத்தில் இருந்து பெறமுடியாத அதேசமயம் உங்களுக்குப் பிடித்தமான தகவல்களை நீங்கள் அங்கே காணலாம்,” என விவரித்தார் ஆர்க்குட். 

ஒருவர் சமூக ஒருங்கிணைப்பு என கூகுளில் தேடினால் உங்களுக்கு கிடைக்கும் விளக்கம் என்னவாக இருக்குமோ அதைத்தான் ஹலோ செய்ய விரும்புகிறது. சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இந்தச் செயலி மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருப்பதாக பல பயனர்கள் ப்ளே ஸ்டோரில் கருத்து தெரிவித்திருந்தனர். ஆர்க்குட் இதற்கு விளக்கமளித்துள்ளார். 

“நாம் பல காலமாக பயன்படுத்தி வரும் முகநூல், ஸ்நாப்சாட் போன்ற சமூக செயலிகளும் சிக்கல் நிறைந்தாகவே இருக்கிறது. ஆனால் அவற்றை நாம் பழகி விட்டதால் அதிலுள்ள சிக்கல்களை நாம் உணர்வதில்லை. ஹலோவின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளத் துவங்கி சில நாட்களே ஆகின்றன. வரும் நாட்களில் எளிதாக பழகிவிடும். இந்திய ப்ராடக்டுகளுக்காக UX / UI அனுபவம் மிக்க உள்ளூர் வடிவமைப்பாளர்களுடன் பணியாற்ற திட்டமிட்டு வருகிறோம். இதனால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்ப சேவையளிக்கப்படும் என்றார்.

உலகளவிலான சமூக ஒருங்கிணைப்பிற்காக இந்திய நுணுக்கங்களை சேர்த்தல்

ஜெட் ஹலோவை அறிமுகப்படுத்துவதற்காக ஹலோவின் உள்ளூர் பார்ட்னராக முன்னணி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புதுமை நிறுவனமான ஜெட்சிந்தசிஸ் நிறுவனத்தை ஆர்க்குட் தேர்ந்தெடுத்தார். இது இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை நிர்வகிக்கும். ஜெட் லேப்ஸால் இயக்கப்படும் ’தி கேரேஜ்’-ல் இருந்து ஜெட் ஹலோ குழு செயல்படும். விளையாட்டு, இசை, டிஜிட்டல் மற்றும் சமூக பொழுதுபோக்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள், சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் செயலி 100mb போன்ற பிரபலங்களின் வீடியோ வலைதளம் என பல்வேறு வணிகப் பிரிவுகளைக் கொண்டுள்ள டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனம் ’ஜெட்சிந்தசிஸ்’.

”ஜெட்சிந்தசிஸின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வான ராஜன் நவானியைக் குறித்து உயர்வாக பேசி ஜெட் நிறுவனத்தை ஒரு நண்பர்தான் எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். தொழில்நுட்பம், தயாரிப்பு, சமூக ஒருங்கிணைப்பில் பயனர்களின் தேவைக்கு பொருத்தமான தீர்வுகாண்பது ஆகியவையே ஹலோவின் பலம். அதே சமயம் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் மார்க்கெட்டிங்கிலும் எங்களுக்கு இல்லாத நிபுணத்துவம் ஜெட்டுக்கு இருக்கிறது. அந்த வகையில் எங்கள் இணைப்பு கச்சிதமானது,” என்கிறார் ஆர்குட்.

இந்தியாவின் மொபைல் பயன்பாட்டுச் சூழல் பிரத்தியேகமானது என்பதை ஆர்க்குட் உணர்ந்திருக்கிறார். ”ஆண்ட்ராய்டின் முந்தைய வடிவங்களான கிட்கேட் போன்றவற்றிற்கான ஆதரவையும் நாங்கள் உருவாக்கவேண்டியிருந்தது. அதுமட்டுமல்லாமல் எளிதாக இணையத் தொடர்பு தடைபடலாம். அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பேண்ட்வித் குறைவு. எனவே குறைந்த பேண்ட்வித்தை ஆதரிக்கும் பணியையும் மேற்கொண்டோம்,” என்றார் ஆர்க்குட்.

பயனர்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கும் கருத்துகளும் புதிய சிந்தனைகளும் உள்ளடக்கத்தையும் பயன்பாட்டையும் மேம்படுத்த உதவியது. 

”பாலிவுட், கிரிக்கெட் என்று பல பர்சோனாக்களை நாங்கள் உருவாக்கியது அப்படித்தான். மக்களுக்கு டீ எத்தனை பிடிக்கும் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். எனவே தனியாக ’சாய் லவர்’ (chai lover) என்றொரு பர்சோனாவையும் நாங்கள் உருவாக்கினோம். முந்தைய ஆர்க்குட் பயனர்களையும் புதிய ஹலோ பயனர்களையும் சந்திப்பது அற்புதமான அனுபவம்,” என்கிறார் ஆர்குட்.

தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன

ஹலோ சுற்றுச்சூழலில் விளம்பரங்களை இணைக்க ஆர்க்குட் விரும்புகிறது. ஆனால் கண்டபடி விளம்பரங்களை நுழைத்து இடையூறு செய்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் அவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்க விரும்பியது ஆர்குட். சமூக வலைத்தளங்கள் அச்சமூட்டுபவையாக மாறிவிட்டன. நம்முடைய ஒவ்வொரு கிளிக்கும் கண்காணிக்கப்படுகிறது. உங்கள் அம்மாவை நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனைமுறை அழைக்கிறீர்கள் என்பது வரை அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. நீங்கள் ஒருமுறை பார்க்கும் விளம்பரங்கள், குக்கீஸ் மூலமாக நீங்கள் எங்கே போனாலும் உங்களைப் பின்தொடர்ந்துவருகின்றன. விதிமுறைகள் என்னும் பெயரில் பொடி எழுத்தில் பலவற்றை எழுதி உங்கள் சம்மதத்தையும் பெற்றுக்கொண்டுவிடுகிறார்கள். ஹலோ அப்படியல்ல. 

நாங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை ஒருவருக்கும் விற்பதில்லை. பகிர்ந்துகொள்வதும் இல்லை. செயலியில் உங்களது அனுபவத்தை மேம்படுத்தவே அவற்றை பயன்படுத்துகிறோம். நீங்கள் எத்தகைய வீடியோயை விரும்பிப் பார்க்கிறீர்களோ அதே மாதிரியான கூடுதல் வீடியோக்களை நாங்கள் வழங்குகிறோம்.

இதில் வேறுபாடு என்னவென்றால் முகநூல், தரவுகளை பணமாக்கி உங்களைப் பற்றிய தகவல்களை அதிகம் ஊடுருவி அறிந்துகொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்களை வழங்குகிறது. ஆனால் ஹலோவில் நீங்கள் விரும்பும் உள்ளடக்கத்தையோ அல்லது நீங்கள் தேர்வு செய்யும் பர்சோனாக்களையோ அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்கள் இடம்பெறும். உதாரணத்திற்கு உங்களுக்கு ஓட்டத்தில் விருப்பம் இருந்தால் Adidas விளம்பரத்தை நீங்கள் பார்க்கலாம். 

”ப்ராண்ட் சரியான பயனரைச் சென்றடைவதில் அல்லாமல் பயனருக்கு சரியான ப்ராண்ட் கிடைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு பயனர் அனுபவத்தில் மாறுபட்டுள்ளது,” என்றார் ராஜன்.

உங்களுக்கு சரியான தயாரிப்பு கிடைத்தால் அது தானாகவே விற்பனையாகிவிடும் என்பதே சமூக ஒருங்கிணைப்பின் சிறப்பம்சம். ஜெட் ஹலோ இதில்தான் கவனம் செலுத்துகிறது. இந்தியா முழுவதும் பல மில்லியன் பயனர் தொகுப்பை உருவாக்குவதே ஜெட் சிந்தசிஸின் அடுத்தகட்ட இலக்காகும். “ஒரு நிறுவனமாக பிரபலங்கள் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் ஆகியோரைக் கொண்டு பயனர்களைச் சென்றடையத் துவங்க திட்டமிடுகிறோம்,” என்றார் ஜேட் சிந்தசிஸ் தலைவரான அனுபவ் திவாரி.

ஆர்க்குட் அடுத்து எங்கே ’ஹலோ’ சொல்லப்போகிறார்?

அமெரிக்கா, கனடா என வட அமெரிக்காவிலும், பின்னர் ஐரோப்பா, யூகே, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் செயல்பட உள்ளது. ஆனால் தற்சமயம் இந்தியாவில் கவனம் செலுத்துவதாக ஆர்க்குட் தெரிவித்தார்.

ஆர்க்குட் தளத்தில் இருந்து ஆர்க்குட் புயக்கோக்டன் கற்ற படிப்பினைகள்

ஆர்க்குட்டின் அற்புதமான விஷயம் சமூகம்.

“மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ள பாதுகாப்பான இடம். இதே தத்துவத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். ஹலோவை புதுப்பொலிவுடன் துவங்கியுள்ளோம். பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த தலைமுறையைக் காட்டிலும் வேறுபட்டுள்ளதால் தற்போதுள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம்,” என்றார் ஆர்க்குட்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL